.

.

Saturday, October 30, 2010

நீ வந்து போ...அம்மா


உன்னை நான் அழைக்கும்
எந்தன் அழுகுரல் கேட்டும்
ஓடோடி வருவதற்கு என்னிடம்
உனக்கு இன்னும்
மனதில்லையா அம்மா...?

பசியென்று நான் அழும்வேளையில்
பரிவோடு நீ எனக்குப்
பால்சோறு ஊட்டிவிடுவாய்... ஆனால்
அதற்காக நான் உன்னை
அழைக்கவில்லை அம்மா!

கண்கள் குளமாகி நான்வந்தால்
கட்டியணைத்து என்னை
இதமாய் முத்தமிடுவாய்... ஆனால்
அதற்காக நான் உன்னை
அழைக்கவில்லை அம்மா!

ஆரிராரோ பாட்டுப்பாடி
தோளில் சுமந்து என்னைச்
சுகமாய்த் தூங்கவைப்பாய்...ஆனால்
அதற்காக நான் உன்னை
அழைக்கவில்லை அம்மா!

மடியினில் கிடத்தித் தாலாட்டி
மனம் மகிழக்
கதைகள் சொல்வாய்...ஆனால்
அதற்காக நான் உன்னை
அழைக்கவில்லை அம்மா!

ஒவ்வொரு நாளும் என்னோடு
ஓடிப் பிடித்து
ஒளிந்து விளையாடுவாய்...ஆனால்
அதற்காக நான் உன்னை
அழைக்கவில்லை அம்மா!

பொங்குகின்ற பாசத்தில்
நெஞ்சமெல்லாம் நிறைய
ஆசையாசையாய் உன்னைப் பார்த்து
'அம்மா'என்று
அழைக்கவேண்டும் !

என் உயிர் ஒலியின்
அந்தக் கடைசி
வார்த்தையைக் கேட்பதற்காவது
ஒருமுறை,
ஒரே ஒருமுறை
நேரில் நீ வந்து போ...அம்மா!


No comments: